இலங்கை பரமசிவன் கழுத்தில் அமரும் பாம்பாகிறது!
தனபாலா
ஆயிரம் பூக்கள் பகுதி வாசகர்களும் பங்குகொண்டு விவாதிக்கக்கூடிய ஒரு களம். இங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கான எதிர்வினைகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்க பொங்குதமிழ் தயாராகவே உள்ளது.
முன்வைக்கப்படும் கருத்துகள் விவாதங்களோடு தொடர்பானதாகவும் ஊடக அறம் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைகளை சுருக்கவும் தவிர்க்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு
யானையின் கால் பட்டால் தேள் இருந்த அடையாளமே தெரியாமல் அழிந்து விடும். ஆனால் யானையின் மூக்கிற்குள் தேள் நுழைந்து விட்டால் தன் கையால் தன்னை யானை மாய்த்துக் கொள்ளும். யானைக்குப் பலம் தும்பிக்கை. ஆனால் தும்பிக்கைக்குள் தேள் நுழைந்து விட்டால் யானை தன் துதிக்கையால் தன்னைத் தானே அழித்துவிடும். இந்தியாவிற்கு இலங்கை ஒருபுறம் சீனாவின் கழுத்தில் அமரும் பாம்பாகவும் மறுபுறம் யானையின் மூக்கிற்குள் நுழையும் தேளாகவும் மாறிவருகிறது.
சிங்கள ஆட்சியாளரை நயத்தால் கையாள முடியாதென முன்னாள் பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். இதில் அவருக்கு பிரதம ஆலோசகராக இருந்தவர் வெளியுறவுக் கொள்கைத் திட்டமிடல் குழுத் தலைவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக உபவேந்தராய் இருந்தவருமான ஜி.பார்த்தசாரதியாவார்.
இலங்கைக்கு சைப்பிரஸ் பாணியை ஒத்த ஒருவகை இராணுவ நடவடிக்கையே பொருத்தமாய் அமையும் என முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நம்பினார்.
பலாலியில் இந்திய தரைப்படையையும் திருகோணமலையில் இந்திய கடற்படையையும், கட்டுநாயக்காவில் இந்திய விமானப்படையையும் 1984 ஒக்டோபரில் தரை இறக்குவதென உத்தேசிக்கப்பட்டது. ஆனால் இந்திய இராணுவ உயர்பீடம் இதற்கு நிர்வாகக் காரணங்களைக் காட்டி கால அவகாசம் கோரியது. அதாவது இந்திய இராணுவம் சிவில் நிர்வாகம் செய்ய பழக்கப்பட்டது அல்ல என்றும் அதற்கான விசேட பயிற்சிகளைப் பெற மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை என்றும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இராணுவத்தினர் பயிற்றப்பட வேண்டும் என்றும் உத்தேசிக்கப்பட்டது.
அவ்வாறு இராணுவத்தினரை தரை இறக்கும்போது இயல்பாகவே ஜே.ஆர்.அரசாங்கம் கவிழும் என்றும் பதிலுக்கு சிறிமாவோ பண்டாரநாயக்காவை பதவிக்கு கொண்டுவந்து வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வை சிறிமாவோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் இடத்து படிப்படியாக இராணுத்தை விலக்கிக் கொள்வது என்றும் உத்தேசிக்கப்பட்டது. அல்லது ஜே.ஆர் பதவி கவிழாதவிடத்து இத்தகைய நிபந்தனையை அவரிடம் முன்வைப்பது என்றும் உத்தேசிக்கப்பட்டது. இதையொத்த ஒரு நடைமுறை ஏற்கனவே துருக்கிய இன சைப்பிரஸில் துருக்கிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இங்கு கவனிக்கத் தக்கது.
இராணுவத்தின் ஆலோசனையின்படி 1985இன் முற்பகுதியில் இப்படியான படை நகர்விற்கு உத்தேசிக்கப்பட்டிருந்ததாக பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.
வெளிப்படையான அர்த்தத்தில் பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவம் பிரவேசித்தமைக்காக பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் போல் தோன்றினாலும் அவரின் கொலைக்குப் பின்னால் வெளிநாடுகளின் கரங்கள் இருந்தன என்பதும் அவை பொற்கோவில் விவகாரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன என்பதுமே உண்மை. ஒருவேளை இலங்கை மீதான இந்தியப் படையெடுப்பை தடுப்பதற்கான ஒரு வழியாகத்தான் இதனை ஒரு வெளி அரசு செய்வித்திருக்கக் கூடுமோ என்ற ஐயத்தில் நியாயம் உண்டு.
இங்கு சிறப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சிங்கள அரசை ஒருபோதும் நயத்தால் இந்திய அரசால் வெற்றிகொள்ள முடியாது என்ற முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கணிப்பீடே சரியானது.
பனிப்போர் காலத்தில் சிங்கள அரசிற்கு இருந்த சாதகமான வெளிநாடுகளின் பட்டியலும் வேறு, அதற்கான புவியியல் நிலைமைகளும் வேறு. தற்போதைய நிலையில் சிங்கள அரசிற்கு சாதகமாகக் காணப்படும் வெளிநாடுகளின் பட்டியலும் வேறு. புவியியல் நிலமைகளும் வேறு. அதாவது தற்போது ஆசிய நாடான சீனா இலங்கையின் ஒரு பாகமாகும் நிலை உருவாகிவிட்டது. 1980களில் இந்திய எதிர் நாடுகளைத் தழுவிய சிங்கள அரசிற்கு இருந்த பலத்தை விடவும் தற்போது சீனாவை தழுவுவதால் உருவாகும் சிங்கள அரசின் பலம் மிகப் பெரியது.
சீனாவுடனான இலங்கையின் உறவைப் பார்த்து 'இந்தியா பயப்படத் தேவையில்லை' என ஜனாதிபதி ராஜபக்ச இந்தியாவிற்கு ஆறுதல் கூறும் பாணியில் இந்தியாவை இராஜதந்திர ரீதியில் மிரட்டக்கூடிய அளவிற்கு இலங்கையின் கை ஓங்கி உள்ளதை அவதானிக்க முடிகிறது.
ஒரு காலத்தில் இலங்கையை இந்தியா அச்சுறுத்தியதற்குப் பதிலாக தற்போது இந்தியாவை இலங்கை அச்சுறுத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
1980களின் முன்னரைப் பகுதியில் சிங்கள ஆட்சியாளரைப் பொறுத்து இந்திரா காந்தி கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கை முறைமையானது கண்டிப்பும், வலிமையும் மிக்கதாக இருந்தது. இந்திரா காந்தியின் மறைவின் பின்பு ஜீ.பார்த்தசாரதியை இராஜதந்திர அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் என ஜே.ஆர். திட்டமிட்டார். அவரை ஒரு தமிழர் எனக் காரணம் காட்டி அவரை அகற்றுமாறு இந்திய அரசிடம் வற்புறுத்தி தாம் கையாளக்கூடிய ரொமேஸ் பண்டாரியை சிங்கள ஆட்சியாளர் தெரிவாக்கிக் கொண்டனர். பார்த்தசாரதி அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக ரொமேஸ் பண்டாரி அமர்த்தப்பட்டதுடன் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதில் சிங்கள இராஜதந்திரிகள் தமக்குச் சாதகமான ஆடுகளத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர்.
அன்றைய இந்திய வெளியுறவுக் கொள்கையின் மூலைக் கல்லாக ஜீ.பார்த்தசாரதி இருந்ததைப் புரிந்து கொண்ட சிங்கள ஆட்சியாளர் அந்த மூலைக்கல்லை அகற்றுவதன் மூலம் இந்திய இராஜதந்திரக் கட்டுமானத்தையே தகர்த்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்து அவ்வாறே அதைச் செய்வதில் வெற்றியும் பெற்றனர். இதில் சிங்கள இராஜதந்திரிகள் தொழிற்துறைசார் நிபுணத்துவத்துடன் செயற்பட்டனர். அதேவேளை ஈழத்தமிழர் தரப்பில் இத்தகைய இராஜத்திர அணுகுமுறை எதிலும் எவ்வித அக்கறையும் இருக்கவில்லை என்பதுடன் துறைசார் நிபுணத்துவத்தில் கவனம் செலுத்தப்படவும் இல்லை. அத்தகைய ஒரு இராஜத்திர மரபு ஈழத்தமிழர் தரப்பில் பெரிதும் இருக்கவில்லை என்பதை நாம் துயரத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்.
நிலைமைகளை உத்தேசித்து யதார்த்தத்தை உள்வாங்கி 'ஓரடி பின்னால் ஈரடி முன்னால்' என்ற நிலைப்பாட்டை எடுப்பதில் சிங்கள இராஜதந்திரிகள் எப்போதும் வல்லவர்கள். இதில் வெட்கம் என்றும், துக்கம் என்றும் அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் தம்மைத் தக்கவைத்தல், தருணம் வரும்பொழுது தோளில் பாய்தல் என்பதில் அவர்கள் குறியாய் இருப்பவர்கள். தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா மேலோங்கத் தொடங்கும் சூழலில் சீனாவிற்கு கைகொடுத்து தம்மை உயர்த்திக் கொள்ள சிங்கள அரசு திட்டமிட்டுவிட்டது.
நேற்று இந்தியாவிற்குப் பயந்த இலங்கை அரசு இன்று இந்தியாவை அச்சமூட்டக் கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டது. 'யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்' என்பதை இலங்கை அரசு தன் நடைமுறைக்குள்ளால் நிரூபித்துள்ளது. முதலில் தற்காப்பு அடுத்து நிலையெடுப்பு பின்பு காத்திருப்பு இறுதியில் குரல்வளையைக் கடிப்பது என்ற அணுகுமுறையில் சிங்கள இராஜத்திரிகள் நம்பிக்கை கொண்டவர்கள். இராஜதந்திரத்தின் அடிப்படையே தற்காப்பிற்தான் ஆரம்பமாகிறது. தற்பாதுகாப்பிற்கு பதுங்க வேண்டிய நேரத்தில் பதுங்குவது, பின்வாங்க வேண்டிய நேரத்தில் பின்வாங்குவது, தாக்கவேண்டிய நேரத்தில் தாக்குவது எனும் மூன்றியல்பும் அவசியமானவைகளாகும். இவ்வாறு தற்காக்கும் ஒருவரே பின்பு முன்னேறுவதற்கான தகுதியுள்ளவராகலாம்.
தற்போது தமிழ்த் தரப்பினரைப் பார்த்து ராஜபக்சாக்கள் கூறும் வாக்கியங்கள் மிகவும் கவனத்திற்குரியவை. புலிகள் கேட்டதை நீங்கள் யாரும் கேட்கக் கூடாது. வரலாறுகளைப் பற்றி எதுவும் கதைக்கக்கூடாது, அரசியல் தீர்வுகள் பற்றி எதுவும் பேசவேண்டாம். அபிவிருத்திகள் பற்றிப் பேசுவோம். தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது அதிகாரப்பரவல் அல்ல, அபிவிருத்திதான். அதாவது தீர்வு பற்றி ஒரு காலத்தில் பேசிய சிங்களத் தலைவர்கள் இப்போது தாம் மேலோங்கிய நிலையில் இனக் கரைப்புச் செய்வதற்கு ஏதுவான அபிவிருத்தி பற்றிப் பேசுகிறார்கள். அதாவது சிங்களமயமாக்கலுக்குச் சாதகமான அபிவிருத்தி பற்றிப் பேசுகிறார்கள்.
தமிழர் கோருவது அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் அதிகாரத்தைத்தான். அதைத்தான் நாம் அரசியல் தீர்வு என்கிறோம். அதாவது நாம் அபிவிருத்தியை நிராகரிக்கவில்லை. எமது வாழ்நிலை, பழக்கவழக்கம், பண்பாடு என்பவற்றிற்கு இசைவான அபிவிருத்தியை நாம் செய்வதற்கு எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று கோருகிறோமே தவிர தமிழினத்தை சிங்கள இனமாக கரைப்பதற்கு ஏதுவான பண்பாட்டுக் கொலையைச் செய்யவல்ல சிங்கள மேலாதிக்க அரசியல் ஆதிக்கத்தை அல்ல. இங்கு சிங்கள அரசு ஒடுக்கு முறையை இன்னொரு தளத்திற்கு அபிவிருத்தி என்ற அழகான வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் இராஜதந்திர ரீதியாக நகர்த்தியுள்ளது. எனவே அரசியலைப் பற்றிக் கதைக்க மாட்டோம்; அபிவிருத்தி பற்றிக் கதைப்போம் என்பது ஒடுக்குமுறைக்கான இன்னொரு பெயராகும்.
'அரசியல் என்பதே பொருளாதாரம் பற்றிய ஒரு வித்தைதான். பொருளாதாரம் என்பதே அரசியலின் வெளிப்பாடுதான்' என்பதைப் புரிந்து கொண்டால் ராஜபக்சாக்கள் கூறும் அபிவிருத்தியின் இரகசியத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஓநாயின் பொருளாதார நடவடிக்கை என்பது ஆட்டுக் குட்டியைப் பிடித்துத் தின்பதாக இருக்கும். ஆனால் ஆட்டுக்குட்டியின் பொருளாதார நடவடிக்கை என்பது புல்லைத் தின்பதாக இருக்கும். இதில் ராஜபக்சாக்கள் கூறும் பொருளாதார அபிவிருத்தி என்பது ஆட்டுக் குட்டிகளைப் பிடித்துத் தின்னும் ஓநாய்களின் அபிவிருத்தியாகும்.
'அரசியல் இன்றி அபிவிருத்தி இல்லை. எல்லாம் அரசியலுக்கு கீழ்பட்டதே' என்ற மார்க்ஸின் வார்த்தை இங்கு ஆழ்ந்த கவனத்திற்குரியது. இந்தவகையில் அபிவிருத்தி என்பதன் பெயரில் ராஜபக்சாக்கள் ஓர் இன அழிப்பிற்கான இராஜதந்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
சிங்கள இராஜதந்திரத்தில் இப்போது ஒருங்கிணைந்த இராஜதந்திர முறைமை பின்பற்றப்படுகின்றது. அதாவது இந்திய எதிர்ப்பு, தமிழின அழிப்பு, சர்வதேசக் கூட்டு எனும் இம் மூன்று விடயங்களிலும் ஓர் ஒருங்கிணைப்பு இருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த இராஜதந்திர அணுகுமுறையைப் புரிந்து கொள்ளாமல் இந்தியாவோ, ஈழத்தமிழர் தரப்போ, மற்றும் சர்வதேச நாடுகளோ இலங்கை அரசை எதிர்கொள்ள முடியாது.
ஜி. பார்த்தசாரதிக்கு நெருக்கமாக இருந்த கனேசலிங்கன் என்பவர் தற்போதும் இந்திய அடிவருடியாகவே இருக்கிற்னார். ஆகவே இந்திய சதிக்கு எதிராக சிந்திக்க முடியாத அல்லது விருப்பமற்ற நிலையில்தான் தமிழர்களின் சிந்தனை வளர்க்கப்பட்டிருக்கின்றது. மேற்படி பதிவில் நீங்கள் இந்தியாவின் துரோகத்தனத்தையும் குள்ளநரித்தனத்தையும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்களலாம். இல்லாவிட்டால் இன்று பத்தி பத்தியாக எழுதும் அனைத்து அரசியல் ஆய்வாளர்களின் பட்டியலில் தான் உங்களையும் உள்ளடக்கவேண்டியிருக்கும்.